ராமநாதபுரம்: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு… தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதுடன் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களும் அதிகரித்து வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் அமமுக பிரமுகரின் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து இரண்டு வாரங்களிலேயே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் மற்றும் ரவுடியிசம் அதிகரித்து வருகிறது. மாற்றம் வேண்டும் என மக்கள் தவறான முடிவெடுத்து விட்டனர் என்பதை இன்னும் 6 மாதங்களில் மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.
அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக ஆசைவார்த்தை கூறி தவெக குதிரை பேரம் நடத்தியதால் சிலர் பிரிந்து சென்று ஆதரவளித்தனர். ஆனால் தவெக பொய்யான வாக்குறுதி அளித்ததை உணர்ந்த பலரும் மீண்டும் பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.
திமுக கூட்டணியில் வெற்றி பெற்றவர்கள் தவெகவுக்கு ஆதரவு அளித்து அமைச்சரவையில் சேர்ந்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி வராமல் தடுக்க ஆதரவு அளித்ததாக கூறுவது அவர்களுக்கு சரியாக இருக்கலாம். ஆனால் அது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.
அவருக்கு ஆதரவு அளித்த அதிமுக எம்எல்ஏக்களை விஜய் நடுத்தெருவில் விட்டுள்ளார். குறுக்கு வழியில் திராவிட கட்சிகளை முதல்வர் விஜய் அழிக்கப் பார்க்கிறார். மின்சார பிரச்சினை உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளை அவர் சரியாக கையாளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.