திருவனந்தபுரம்: ராட்டினம் முறிந்து விபத்து… கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் ஹேப்பி லேண்ட் கேளிக்கை பூங்காவில் ஏற்பட்ட விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ராட்டினத்தில் பொதுமக்கள் பலர் ஏறி சுற்றிக்கொண்டிருந்தபோது, திடீரென ராட்டினத்தின் முக்கிய கம்பி முறிந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் ராட்டினம் கட்டுப்பாட்டை இழந்து சாய்ந்த நிலையில், அதில் பயணம் செய்தவர்களில் நாகர்கோவில் சேர்ந்த 2 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் உட்பட 5 பேர் கடுமையாக காயமடைந்தனர்.
விபத்து நடந்த உடனே பூங்கா ஊழியர்கள் மற்றும் மீட்புப்படையினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டனர். பின்னர் அவர்கள் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சிலரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் அவர்களது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். பூங்காவில் பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.