ஐதராபாத்: காலை உணவு திட்டம் தொடக்கம்… தெலுங்கானாவில் இடைநிலை மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தை ஜூன் 12-ம் தேதி முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த காலை உணவுத் திட்டத்திற்கான உணவுப் பட்டியலையும் மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, மாணவர்களுக்கு போண்டா, தோசை, பூரி, சிறுதானிய இட்லி, உப்புமா உள்ளிட்ட பல்வேறு சிற்றுண்டிகள் வழங்கப்பட உள்ளன.
மாணவர்களுக்கு தினமும் ஒரு வகை காலை உணவு வழங்கப்படும் என்றும், அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கும் வகையில் உணவுப் பட்டியல் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த உணவுகளுடன் சட்னி, சாம்பார் மற்றும் கலவை காய்கறி குருமா போன்ற துணை உணவுகளும் வழங்கப்பட உள்ளன.
இடைநிலை மாணவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை வழங்கும் நோக்கில் இந்த திட்டத்திற்காக அரசு ஆண்டுதோறும் ரூ.120 கோடி செலவிட உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 1.92 லட்சம் இடைநிலை மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதுவரை நாட்டின் பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தெலுங்கானாவில் இடைநிலை மாணவர்களுக்கும் மதிய உணவுத் திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, மதிய உணவுடன் காலை உணவையும் வழங்க வேண்டும் என்ற முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியின் முடிவின் அடிப்படையில் இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
,