ஜெருசலேம்: ராணுவ கட்டுப்பாட்டை விரிவுபடுத்தும் இஸ்ரேல்… காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டை மேலும் விரிவுப்படுத்த உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
காசாவின் மொத்த நிலப்பரப்பில் 70 சதவீதத்தை ராணுவ பாதுகாப்பு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே தற்போதைய இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேற்குக்கரையில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய நெதன்யாகு, “ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. முன்னதாக 50 சதவீதமாக இருந்த கட்டுப்பாடு தற்போது 60 சதவீதமாக உயர்ந்துள்ளது. அடுத்த கட்டமாக 70 சதவீத கட்டுப்பாட்டை எட்டுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.
அவர் பேசிக் கொண்டிருந்த போது, அரங்கில் இருந்த சிலர் காசா பகுதி முழுவதையும் இஸ்ரேல் கைப்பற்ற வேண்டும் என முழக்கமிட்டனர். 2025 தற்காலிக அமைதி ஒப்பந்தத்தின் படி, இஸ்ரேல் படைகள் காசாவின் 53 சதவீத பகுதியிலிருந்து பின்வாங்கியிருக்க வேண்டும். ஆனால், இஸ்ரேல் அந்த எல்லையைத் தாண்டி மேலும் பல பகுதிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக காசா அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், போர்நிறுத்த காலத்திலும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 900 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா மட்டுமின்றி, லெபனானின் தெற்குப் பகுதிகளிலும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
தெற்கு லெபனானின் பரந்த பகுதியை யுத்த மண்டலமாக அறிவித்துள்ள இஸ்ரேல், அங்கிருக்கும் மக்களை உடனடியாக வெளியேறுமாறு எச்சரித்துள்ளது.