பெங்களூரு: கர்நாடகாவில், கவர்னர் செல்வதற்கு வசதியாக அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதை கண்டித்து, சாலையில் அமர்ந்து ஒருவர் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று காலை மங்களூரில் இருந்து பெங்களூருவுக்கு விமானம் மூலம் எச்.ஏ.எல். விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து லோக்பவனுக்கு செல்லும் வழியில், கவர்னரின் வாகன அணிவகுப்பு தடையின்றி செல்வதற்காக ‘ஜீரோ டிராபிக்’ நடைமுறை அமல்படுத்தப்பட்டது.
இதனால் பழைய விமான நிலைய சாலையில் வாகனங்கள் அரை மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த ஒருவர் தனது காரிலிருந்து இறங்கி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவரை சமாதானப்படுத்த முயன்ற போலீசாரிடம், “கவர்னர் மட்டும் தான் விஐபியா? நானும் விஐபிதான். என் மனைவி கர்ப்பிணியாக காருக்குள் இருக்கிறார். அவருக்கு ஏதாவது ஏற்பட்டால் யார் பொறுப்பு?” என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து பாதுகாப்பு போலீசார் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தை அங்கிருந்தோர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்த நிலையில், போராட்டம் நடத்திய நபருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.