பெங்களூரு: ராஜ்யசபா பதவி வேண்டாம்… கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து விலகிய பின்னர், காங்கிரஸ் மேலிடம் வழங்கிய ராஜ்யசபா வாய்ப்பை நிராகரித்துள்ளதாக சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா தனது ராஜினாமா கடிதத்தை மக்கள் மாளிகையில் சமர்ப்பித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனது அரசியல் பயணம் இன்னும் முடிவடையவில்லை. நான் தொடர்ந்து மாநில அரசியலிலேயே தீவிரமாக செயல்படப் போகிறேன். தேசிய அரசியலுக்கு செல்லும் எண்ணமே எனக்கு இல்லை” என்று கூறினார்.
மேலும், “ராஜ்யசபா செல்லும் வாய்ப்பு குறித்து என்னிடம் கேட்கப்பட்டது. ஆனால் நான் அதனை நிராகரித்துவிட்டேன். கர்நாடக அரசியலிலேயே தொடர்ந்து இருக்க விரும்புகிறேன்” என்றும் தெரிவித்தார்.
காங்கிரஸ் மேலிடம் கேட்டால் ராஜினாமா செய்வேன் என்று ஏற்கனவே பலமுறை கூறியிருந்ததாகவும், இரண்டு நாட்களுக்கு முன்பு மேலிடம் பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக்கொண்டதன் பேரிலேயே தற்போது ராஜினாமா செய்ததாகவும் அவர் விளக்கமளித்தார்.
அதே நேரத்தில், “ஏழு கோடி மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இரண்டு முறை முதல்வராகவும், இரண்டு முறை எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளேன்” என்று கூறிய அவர், காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள், தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களுக்கு நன்றி தெரிவித்தார். “நான் ஒரு தற்செயலான அரசியல்வாதி. என் குடும்பத்தில் யாருக்கும் அரசியல் பின்னணி இல்லை” என்றும் சித்தராமையா குறிப்பிட்டார்.