மதுரை: ”குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்கும் போக்சோ சட்டம், பெரியவர்களின் தனிப்பட்ட பகை, பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கான ஆயுதமாக மாறிவிடக் கூடாது” என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக ‘சிங்கப்பெண் விழிப்புணர்வு பயிலரங்கம்’ என்ற பெயரில் மாநிலம் முழுதும் பயிற்சித் திட்டத்தை தமிழக அரசு நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, உசிலம்பட்டி போக்சோ நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட 4 வழக்குகள் ஒன்றாக விசாரிக்கப்பட்டன.
விசாரணையில் குடும்பத் தகராறு, சொத்துத் தகராறு, கிராமப் பகை, வழக்கறிஞர்களின் மிரட்டல் போன்ற காரணங்களால் அப்பாவி சிறுமிகளை பயன்படுத்தி பொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டது தெரியவந்ததாக நீதிபதி எல்.விக்டோரியா கவுரி தெரிவித்தார்.
போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்துவது, உண்மையில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நீதியை பாதிப்பதுடன் நீதிமன்ற நேரத்தையும் வீணாக்குகிறது. குழந்தைகளின் கண்ணியம், கல்வி, உளவியல் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த சட்டத்தின் நோக்கம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.