சென்னை: ‘மக்கள் தலைவா’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் கே. பாக்யராஜ், நடிகர் ரவி மரியாவின் மனிதநேய குணங்களை பாராட்டி பேசினார்.
இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் கே.பாக்யராஜ், ரவி மரியாவின் மனிதநேயம் மற்றும் உதவும் மனப்பான்மையை வெகுவாக பாராட்டினார்.
“சில பூக்களின் வாசனை காற்றின் திசையில் மட்டுமே பரவும். ஆனால் மனிதரின் நற்பண்பு காற்றுக்கு எதிராகவும் பரவும். அது ரவி மரியாவிற்கு மிகவும் பொருந்தும்” என்று அவர் குறிப்பிட்டார். மேலும், படத்தில் மரியா முதன்முறையாக கதாநாயகனாக நடித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
திரைப்படங்களில் சென்சார் பிரச்சினைகள் குறித்து தனது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்ட அவர், காட்சிகள் இயல்பாக இருந்தால் அவற்றை நியாயப்படுத்தி திரையில் கொண்டு வர முடியும் என்றார்.