சென்னை: ‘குட் நைட்’, ‘குடும்பஸ்தன்’ உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்ற நடிகர் மணிகண்டன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘மக்கள் காவலன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.
‘பீட்சா 2’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமான மணிகண்டன், ‘காலா’, ‘ஜெய் பீம்’, ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக எளிய மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் அவர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
திரைக்கதை மற்றும் வசன எழுத்திலும் ஆர்வம் கொண்ட மணிகண்டன், ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். மேலும் ‘நரை எழுதும் சுயசரிதம்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.
இந்நிலையில், நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் பிர்லா ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் மணிகண்டன் நடிக்கிறார். பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் சந்தோஷ் குமார் இப்படத்தை இயக்குகிறார். படத்திற்கு ‘மக்கள் காவலன்’ என பெயரிடப்பட்டுள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கலவரம் நடைபெறும் பின்னணியில் காவல் அதிகாரி தோற்றத்தில் மணிகண்டன் இடம்பெற்றுள்ளார். ‘ஹீரோக்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்’ என்ற வாசகமும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.
நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இப்படம் சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகி வருவதாக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
