சென்னை: தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, நடிகர் ஹரிஷ் கல்யாண் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவான இப்படம் 2024-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கிரிக்கெட் போட்டியைச் சுற்றி உருவாகும் குடும்ப உறவுகள், தலைமுறை வேறுபாடுகள், ரசிகர்களின் தீவிரம் மற்றும் தனிப்பட்ட ஈகோ ஆகியவற்றை கதையுடன் இணைத்திருந்தது.
ரசிகர்களை கவர்ந்த கதாபாத்திரங்கள்
அட்டக்கத்தி தினேஷ் விஜயகாந்தின் தீவிர ரசிகராகவும், ஹரிஷ் கல்யாண் விஜய் ரசிகராகவும் நடித்திருந்தனர். இருவருக்கும் இடையிலான மனநிலை மற்றும் போட்டி படத்தின் கதையில் முக்கிய இடம் பெற்றது.
சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார்.
ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி
படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தாங்கள் உருவாக்கிய சில திரைப்படங்கள் படைப்பாக மட்டுமே இருக்கும் நிலையில், ‘லப்பர் பந்து’ தனது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தாங்கள் கற்பனை செய்ததை விடவும் பெரிய வாழ்க்கையை ரசிகர்கள் இந்தப் படத்துக்கு கொடுத்துள்ளதாகவும், அவர்களின் அன்புக்கு மனதார நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
