சென்னை: சென்னையில் இன்றும் நாளையும் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும் ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வடகடலோர தமிழகத்தின் ஓரிரு இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
