குடகு: காவிரி விவகாரத்தில் கர்நாடக விவசாயிகளின் நலனை பாதுகாப்பது தனது கடமை என அம்மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
குடகு பாகமண்டலாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் உள்ள அணைகள் இன்னும் முழுமையாக நிரம்பவில்லை என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதுடன் சட்டத்தையும் பின்பற்ற வேண்டிய நிலை இருப்பதாகவும் கூறினார்.
மேகதாது அணை விவகாரத்தில், கர்நாடக எல்லைக்குள் அணை கட்டுவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதாக அவர் தெரிவித்தார். மேகதாது அணை கட்டப்பட்டாலும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 177.25 டிஎம்சி காவிரி நீரில் பாதிப்பு ஏற்படாது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களை கர்நாடகா பின்பற்ற வேண்டும் என்றும், சட்டத்தை பின்பற்றாவிட்டால் அணைகளின் கட்டுப்பாட்டை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டிய சூழல் ஏற்படலாம் என்றும் சிவகுமார் எச்சரித்தார்.
மழை வேண்டி மக்கள் பிரார்த்தனை செய்து வருவதாகவும், மழைக்காக பிரார்த்தனை செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
