அர்ஜென்டினா: தலைநகர் பியூனஸ் அயர்ஸ் அருகே செயல்பட்டு வந்த லுஜான் மிருகக்காட்சி சாலை சுகாதாரமற்ற சூழல் மற்றும் விலங்குகள் நலன் குறித்த புகார்களால் 2020-ல் மூடப்பட்டது. அப்போது அங்கு 200-க்கும் மேற்பட்ட சிங்கங்கள் மற்றும் புலிகள் கான்கிரீட் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்தன.
விலங்குகளை பாதுகாப்பான சரணாலயங்களுக்கு மாற்ற சர்வதேச விலங்கு நல அமைப்பான Four Paws தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே 2023-ல் பல விலங்குகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது 30 சிங்கங்கள் மற்றும் புலிகளை தென்ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்காவுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விலங்குகளை பெரிய கூண்டுகளுக்குள் தாங்களாகவே செல்லும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சில சிங்கங்களுக்கு மயக்க மருந்து செலுத்தி கூண்டுகளில் ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லுஜான் உயிரியல் பூங்கா மூடப்பட்டபோது சுமார் 200 சிங்கம் மற்றும் புலிகள் இருந்த நிலையில், 2023-ல் Four Paws பொறுப்பேற்றபோது 112 விலங்குகள் மட்டுமே எஞ்சியிருந்தன. இரண்டு ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை 62 ஆக குறைந்ததாக அமைப்பு தெரிவித்துள்ளது.
பல விலங்குகள் உடல் பருமன், தசை இழப்பு, ஊட்டச்சத்து குறைபாடு, பல் மற்றும் சிறுநீரக நோய்கள் உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்பட்டதாக Four Paws தெரிவித்துள்ளது.
