புதுடெல்லி: தேசிய தேர்வு முகமை நடத்திய யுஜிசி நெட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளைத் தொடர்ந்து, ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சோஷியாலஜி ஆகிய 3 பாடங்களுக்கு மறுதேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 22 முதல் 30-ம் தேதி வரை 87 பாடங்களுக்கு யுஜிசி நெட் தேர்வு நடைபெற்றது. இதில் ஆங்கிலம், வணிகவியல், சோஷியாலஜி பாடங்களில் தவறான மொழிபெயர்ப்பு, எழுத்துப் பிழைகள் மற்றும் ஒரே கேள்வி மீண்டும் இடம்பெற்றது உள்ளிட்ட பிரச்சினைகள் கண்டறியப்பட்டன.
இதையடுத்து செப்டம்பர் 9-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை ஆங்கிலத் தேர்வும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை வணிகவியல் தேர்வும் நடைபெற உள்ளன. செப்டம்பர் 10-ம் தேதி சோஷியாலஜி தேர்வு நடைபெறும்.
மறுதேர்வுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. தேர்வு மையம் மற்றும் ஹால் டிக்கெட் தொடர்பான விவரங்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும்.
மற்ற 84 பாடங்களுக்கான முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும் என்றும், 3 பாடங்களுக்கான மறுதேர்வால் ஆராய்ச்சி உதவித்தொகை மற்றும் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படாது என்றும் NTA தெரிவித்துள்ளது.
