புதுடெல்லி: நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் தரத்தை மேம்படுத்த மத்திய ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ரயில்வேயின் குடிநீர் தரம் தொடர்பாக இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் கேள்விகள் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பயணிகளுக்கான குடிநீர் விநியோகத்தில் உடனடி சீர்திருத்தங்களை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
முதற்கட்டமாக ரயில்வே நெட்வொர்க் முழுவதும் வாட்டர் கூலர்கள் உள்ளிட்ட சுமார் 20,000 இடங்களில் புதிய ‘டேங்க் டு டாப்’ குடிநீர் சுத்திகரிப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் நிறுவப்பட உள்ளன.
தேவையான இடங்களில் பழைய நீர்த்தேக்கத் தொட்டிகளை அகற்றி புதிய தொட்டிகள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் ஆதாரங்கள் மற்றும் விநியோகப் புள்ளிகளில் வழக்கமான நீர்த் தரப் பரிசோதனை மேற்கொள்ளவும், பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் பணிகளை முறையாக மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
