சென்னை: ஆவணி மாத சுபமுகூர்த்த தினமான ஆகஸ்ட் 31-ம் தேதி பத்திரப்பதிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக பதிவுத்துறை தலைவர் அருண் சுந்தர் தயாளர் வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் 31-ம் தேதி கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் வழக்கமாக வழங்கப்படும் 100 முன்பதிவு டோக்கன்களுக்கு பதிலாக 150 டோக்கன்கள் வழங்கப்படும். இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200-க்கு பதிலாக 300 டோக்கன்கள் ஒதுக்கப்படும்.
அதிக அளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களில் சாதாரண முன்பதிவு டோக்கன்கள் 100-ல் இருந்து 150 ஆக அதிகரிக்கப்படுகின்றன. மேலும், ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களும் வழங்கப்பட உள்ளன.
சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு பத்திரப்பதிவு செய்யும் பொதுமக்களின் வசதிக்காக இந்த கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
