காத்மாண்டு: நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்படுத்திய பேரழிவின் தாக்கம் நாளுக்கு நாள் வெளிப்பட்டு வரும் நிலையில், ஆறுகளில் அடித்துச் செல்லப்பட்ட உடல்கள் தொடர்ந்து கரை ஒதுங்கி வருகின்றன. மருத்துவமனை பிணவறைகள் நிரம்பியதால், உயிரிழந்தவர்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் உறவினர்கள் அடையாளம் காண்பதற்கும் புதிய தொழில்நுட்பத்தை நேபாள காவல்துறை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
சித்வான் பகுதியில் மட்டும் 137 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அங்குள்ள மருத்துவமனைகளில் குறைந்த அளவிலேயே உடல்களை பாதுகாக்கும் வசதி உள்ளதால், பயன்படுத்தப்படாத அரசு கட்டிடம் குளிரூட்டப்பட்டு சுமார் 250 உடல்களை வைக்கும் தற்காலிக பிணவறையாக மாற்றப்பட்டுள்ளது.
தனஹுன், கோர்கா, தாடிங், நவல்பராசி உள்ளிட்ட பகுதிகளில் மீட்கப்பட்ட 93 உடல்கள் பொக்காரா நகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அங்கும் மருத்துவமனைகளின் மொத்த கொள்ளளவை விட அதிகமான உடல்கள் குவிந்துள்ளன.
மீட்கப்பட்டவர்களின் புகைப்படம், கைரேகை, உடலமைப்பு உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, அவற்றை ஒருங்கிணைத்து க்யூஆர் குறியீடு உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதை ஸ்கேன் செய்து தங்கள் உறவினர்களின் விவரங்களுடன் ஒப்பிட்டு அடையாளம் காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் டிஎன்ஏ பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கிடையே, 26-ம் தேதி நிகழ்ந்த பேரிடர்கள் தொடர்பான பழைய சம்பவங்களும் சமூக வலைதளங்களில் விவாதமாகி வருகின்றன. குஜராத் பூகம்பம், இந்தியப் பெருங்கடல் சுனாமி, மும்பை வெள்ளம் மற்றும் தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் 26-ம் தேதியில் நிகழ்ந்ததை சுட்டிக்காட்டி, இந்த தேதியை ‘சபிக்கப்பட்ட நாள்’ என சிலர் குறிப்பிடுகின்றனர்.
