ரோம்: கடல் சூழலில் உள்ளூர் மீன்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நீல நண்டுகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில், இத்தாலி கடற்பரப்பில் சுமார் 1.30 லட்சம் ஆக்டோபஸ் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. இந்த வித்தியாசமான முயற்சி கடல்சார் ஆராய்ச்சியாளர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
மத்திய தரைக்கடல் பகுதியில் நீல நண்டுகளின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் வேகமாக அதிகரித்துள்ளது. இதனால் உள்ளூர் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் மீன்பிடித் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதனை சமாளிக்க போலோக்னா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், எமிலியா-ரொமானியா பிராந்திய அரசுடன் இணைந்து ‘ஆக்டோ-ப்ளூ’ என்ற திட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கடலில் விடப்படும் ஆக்டோபஸ் குஞ்சுகள் சில மில்லிமீட்டர் அளவே இருக்கும். அவை வளர்ந்து பெரியதாக மாறும்போது நீல நண்டுகளை வேட்டையாடி அவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஒரு கிலோ எடையுள்ள ஆக்டோபஸ் சாதகமான சூழலில் நாளொன்றுக்கு நான்கு நடுத்தர அளவிலான நீல நண்டுகளை உண்ணும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.
எனினும், திட்டத்தின் வெற்றி குறித்து சில கடல்சார் சூழலியல் நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ஆக்டோபஸ் குஞ்சுகளில் சுமார் 99.9 சதவீதம் வளர்ச்சியடையும் முன்பே உயிரிழக்கக்கூடும் என்பதால், திட்டத்தின் தாக்கம் குறைவாக இருக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது புதிய இனத்தை அறிமுகப்படுத்தும் முயற்சி அல்ல என்றும், அப்பகுதியில் ஏற்கெனவே இயற்கையாக வாழும் ஆக்டோபஸ் இனத்தின் எண்ணிக்கையை அதிகரிப்பதே நோக்கம் என்றும் திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
