புதுடெல்லி: நீதிபதியை மிரட்டிய வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்துக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுத்து இரட்டை இலை சின்னத்தை பெற முயன்ற வழக்கு, தொழிலதிபரிடம் பல நூறு கோடி ரூபாய் மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு ஊழல் வழக்கில் காவலில் இருந்தபோது, சிறப்பு நீதிபதி பூனம் சவுத்ரியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சுகேஷ், முதலில் உச்ச நீதிமன்ற நீதிபதியின் தனிச்செயலாளர் என்றும், பின்னர் அந்த நீதிபதியே பேசுவதாகவும் கூறியுள்ளார்.
அப்போது தனக்கு உடனடியாக ஜாமீன் அல்லது இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் நீதிபதியை மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதுகுறித்து நீதிபதி பூனம் சவுத்ரி உச்ச நீதிமன்றத்தை தொடர்புகொண்டு விசாரித்தபோது, அத்தகைய கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் குற்றவாளி என திஸ் ஹசாரி நீதிமன்றம் கடந்த ஆகஸ்டு 26-ம் தேதி தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து தண்டனை விவரத்தை தலைமை குற்றவியல் நடுவர் ஹர்ஷிதா மிஸ்ரா நேற்று அறிவித்தார்.
அரசு ஊழியர் போல் ஆள்மாறாட்டம் செய்ததற்கும், அரசு ஊழியரை மிரட்டியதற்கும் தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், குற்றவியல் மிரட்டலுக்காக 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனைகளை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
தண்டனைகளை ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், கருணை காட்ட வேண்டும் என்றும் சுகேஷ் சந்திரசேகர் முன்வைத்த கோரிக்கையையும் நீதிபதி நிராகரித்தார்.
