சென்னை: ‘அன்புப் பெரியோர்களே… அருமைத் தாய்மார்களே… இனிய குழந்தைகளே…’ என்ற அன்பான அழைப்பால் தமிழ் மக்களின் மனங்களில் தனி இடம்பிடித்த பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா, வயது மூப்பு காரணமாக காலமானார் என்ற தகவல் தமிழ் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்ப் பேராசிரியராகவும், சிறந்த பேச்சாளராகவும், பட்டிமன்ற நடுவராகவும் பல தலைமுறைகளை கவர்ந்தவர் சாலமன் பாப்பையா.
பொதுமக்கள் அஞ்சலி
அவரது உடல் மதுரை ஆரப்பாளையம் ஞானஒளிவுபுரத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிச்சடங்குகள் முடிவடைந்த பின்னர் தத்தனேரி மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரது மறைவுக்கு தமிழ் ஆர்வலர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சூரி உருக்கம்
நடிகர் சூரி தனது இரங்கல் பதிவில், தமிழக இல்லங்களின் பல சிறப்பு நாட்கள் சாலமன் பாப்பையாவின் குரலுடன் தொடங்கியதாக நினைவுகூர்ந்துள்ளார்.
சமூக அக்கறை, குழந்தை வளர்ப்பு, குடும்ப உறவுகள் மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை குறித்து எளிமையான தமிழில் மக்களுக்கு எடுத்துரைத்தவர் சாலமன் பாப்பையா என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
அந்தக் குரல் ஓய்ந்தாலும், அவர் விதைத்த வாழ்க்கை நெறிகளும் தமிழுக்காக அவர் செய்த பங்களிப்பும் தலைமுறைகள் கடந்தும் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்று சூரி உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
