டாக்கா: வங்கதேசத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்து மத குரு சின்மயி கிருஷ்ண தாஸுக்கு, அவரது தாயாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக 5 மணி நேரம் மட்டும் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
வங்கதேச சம்மிலித சனாதனி ஜாகரன் ஜோத் அமைப்பின் செய்தித் தொடர்பாளரான சின்மயி கிருஷ்ண தாஸ், கடந்த 2024 நவம்பர் மாதம் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், அவரது தாயார் சந்தியா ராணி தார், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
தாயாரின் மறைவுக்குப் பிறகு, இறுதிச்சடங்கில் பங்கேற்க சின்மயி கிருஷ்ண தாஸுக்கு மாவட்ட நிர்வாகம் 5 மணி நேரம் மட்டும் பரோல் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோயிலில் கண்ணீர் மல்க வணக்கம்
சிறையிலிருந்து தற்காலிகமாக வெளியே வந்த அவர், சிட்டகாங்கில் உள்ள புண்டரீக் தாம் கோயிலில் ராதா-கிருஷ்ணர் விக்ரகத்தின் பாதங்களைத் தொட்டு கண்ணீர் மல்க வணங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தாயாரை இழந்த துயரத்தில் அவர் இருக்கும் இந்த காட்சிகள் பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளன.
