புதுடெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தி செப்டம்பர் 5-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள அமைதி பேரணிக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
டெல்லியில் கடந்த ஜூலை மாதம் நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து சிஜேபி அமைப்பினர் மற்றும் மாணவர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி அமைதி பேரணி நடத்தினர். ஜூலை 20-ம் தேதி நடைபெற்ற இந்த பேரணியை கலைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தபோது பதற்றமான சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பரவிய நிலையில், போராட்ட மாணவர்களின் கோரிக்கைகளில் சிலவற்றை அரசு ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அரசு தரப்பில் அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் வழக்குகள் திரும்பப் பெறப்படவில்லை என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என சிஜேபி அமைப்பினர் அறிவித்தனர். அதன்படி செப்டம்பர் 5-ம் தேதி அமைதி பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.
இந்த பேரணிக்கு தடை விதிக்கக் கோரி ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ராஜேந்திர சிங் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் சூர்யகாந்த், மோகனா மற்றும் ஜாய்மால்யா ஆகியோர் அடங்கிய அமர்வு, போராட்டத்தால் அசம்பாவிதம் ஏற்படும் என முன்கூட்டியே கருதுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என தெரிவித்தது.
பேரணியில் பங்கேற்பவர்கள் அமைதியான முறையில் நடந்து கொள்வார்கள் என நம்புவதாக கூறிய நீதிபதிகள், தற்போது அசம்பாவிதம் ஏற்படும் என கருதுவதற்கான கட்டாய சூழல் இல்லை எனக் கூறி பேரணிக்கு தடை விதிக்க மறுத்தனர்.
