சென்னை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முக்கிய கோயில்களில் செல்போன் கொண்டு செல்லும் தடையை அதிகாரிகள் நேற்று முதல் தீவிரமாக அமல்படுத்தினர்.
கோயில்களின் புனிதத்தன்மையை பாதுகாக்கவும், பக்தர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் தரிசனம் செய்யவும் கோயில் வளாகத்திற்குள் செல்போன் கொண்டு செல்ல ஏற்கெனவே கட்டுப்பாடுகள் இருந்தன. ஆனால் சிலர் தடையை மீறி புகைப்படம் எடுப்பதுடன், ‘ரீல்ஸ்’ செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்ததால், 52 முதுநிலைக் கோயில்களில் தடை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கோயில் நுழைவு வாயில்களில் ஒலிபெருக்கி மூலம் செல்போன் தடை குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக கோயில் வாசல்களில் செல்போன் பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ரூ.5 கட்டணம் செலுத்தி செல்போனை ஒப்படைத்து டோக்கன் பெற்றுக்கொள்ளும் வசதியும் உள்ளது.
முதல் நாளான நேற்று தடையை மீறி செல்போன் கொண்டு வந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தொடர்ந்து தடையை மீறினால் செல்போன் பறிமுதல் செய்யப்படுவதுடன், போலீசில் புகார் அளித்து அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேமரா வசதி இல்லாத சாதாரண செல்போன்களை கோயிலுக்குள் கொண்டு செல்ல தடை இல்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
