புதுடெல்லி: இணைய வசதி இல்லாத அல்லது குறைந்த அளவு 2ஜி இணைப்பு கொண்ட பகுதிகளிலும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வகையில் ‘போன்பே 123பே’ என்ற புதிய வசதியை போன்பே அறிமுகப்படுத்த உள்ளது.
நவீன காலத்தில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரித்து வரும் நிலையில், அதனை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
2ஜி இணைப்பு மட்டுமே கிடைக்கும் பகுதிகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை செயல்படுவதை உறுதி செய்ய நோக்கியா, ஹெச்எம்டி, லாவா உள்ளிட்ட பல்வேறு செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் போன்பே ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த வசதியை முதன்முறையாக பயன்படுத்தும் நுகர்வோர்களும் எளிதில் புரிந்து கொண்டு பயன்படுத்தும் வகையில் வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 12 மொழிகளில் இந்த சேவையை பயன்படுத்துவதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
விரைவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களும் இந்த வசதியை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கேமரா பொருத்தப்பட்ட சாதாரண செல்போன்கள் மூலம் க்யூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதியும் வழங்கப்பட உள்ளது.
இதன் மூலம் இணைய வசதி குறைவாக உள்ள கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்களும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை எளிதாக மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
