புதுடெல்லி: இந்தியாவின் செமிகண்டக்டர் உற்பத்தித் துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில் ரூ.1.27 லட்சம் கோடி முதலீட்டில் ‘செமிகான் 2.0’ திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
சிப் வடிவமைப்பு, செமிகண்டக்டர் உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்கள், உற்பத்தி, பேக்கேஜிங், ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாடு என 6 முக்கிய பிரிவுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், இந்தியாவின் செமிகண்டக்டர் துறையின் நீண்ட கால வளர்ச்சியை உறுதி செய்வதே செமிகான் 2.0 திட்டத்தின் நோக்கம் என்றார். உலகளாவிய செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலியில் இந்தியா முக்கிய அங்கமாக மாற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய திட்டத்தின்படி சிலிக்கான் சிப் உற்பத்தி ஆலைகளுக்கு தகுதியான மூலதனச் செலவில் 40 சதவீதம் வரை நிதியுதவி வழங்கப்படும். கூட்டு செமிகண்டக்டர் மற்றும் டிஸ்பிளே ஆலைகளுக்கு 35 சதவீதமும், மேம்பட்ட பேக்கேஜிங் திட்டங்களுக்கு 35 சதவீதமும், வழக்கமான பேக்கேஜிங் திட்டங்களுக்கு 25 சதவீதமும் ஆதரவு வழங்கப்பட உள்ளது.
மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் செமிகண்டக்டர் வடிவமைப்பு பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட செமிகான் 1.0 திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 12 திட்டங்களில் மைக்ரான், கேன்ஸ் செமிகான் மற்றும் சிஜி செமிகான் நிறுவனங்களின் 3 ஆலைகள் இந்த ஆண்டு வர்த்தக உற்பத்தியை தொடங்கியுள்ளன.
