சென்னை: சட்டசபையில் தர்ணாவில் ஈடுபட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவர் எழுந்திருக்க முயன்றபோது, முதல்-அமைச்சர் விஜய் கைகொடுத்து தூக்கிவிட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் நிறைவடைந்ததை தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய் இன்று சட்டசபையில் பதிலுரை அளித்தார். அப்போது கடந்த ஆட்சியில் தி.மு.க. அனைத்து துறைகளிலும் ஊழல் செய்ததாகவும், கட்சி நிதி என்ற பெயரில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மு.க.ஸ்டாலினுக்கு பணம் சென்றதாக அமலாக்கத்துறை கூறியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
முதல்-அமைச்சரின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. உறுப்பினர்கள், இது தொடர்பாக தங்களை பேச அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இதையடுத்து தி.மு.க. உறுப்பினர்கள் சட்டசபையில் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து சபாநாயகர் இருக்கைக்கு முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர்.
தி.மு.க. எம்.எல்.ஏ. தடுமாற்றம்
அப்போது திருவையாறு தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரன், முதல்-அமைச்சர் விஜய்யின் இருக்கைக்கு முன்பாக தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
சிறிது நேரத்துக்குப் பிறகு அவர் தர்ணாவில் இருந்து எழுவதற்கு முயன்றபோது தடுமாறினார். இதைக் கவனித்த முதல்-அமைச்சர் விஜய் உடனடியாக அவரது கையை பிடித்து தூக்கிவிட்டார்.
மேலும், தர்ணாவில் அமர்வதற்கு இடையூறு இல்லாத வகையில் தனது மேஜையை சற்று பின்னால் இழுத்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.
முதல்-அமைச்சர் விஜய், தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு உதவிய இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
