சென்னை: ஐ.யூ.எம்.எல். எம்.எல்.ஏ. ஃபாருக் பாஷா தெரிவித்த குதிரைப் பேர குற்றச்சாட்டு தொடர்பாக சட்டசபையில் இன்று பரபரப்பான விவாதம் நடைபெற்றது. தேர்தலுக்குப் பிறகு 2 ஐ.யூ.எம்.எல். எம்.எல்.ஏ.க்கள் அக்கார்டு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற ஐ.யூ.எம்.எல். நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் எம்.எல்.ஏ. சையது ஃபாருக் பாஷா, சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தன்னையும் மற்றொரு ஐ.யூ.எம்.எல். எம்.எல்.ஏ.வையும் சிலர் தொடர்புகொண்டு, பெட்டி பெட்டியாக பணம் கொடுத்து தங்களுக்கு விருப்பமான அமைச்சர் பதவியை வழங்குவதாக கூறி குதிரைப் பேரத்தில் ஈடுபட முயன்றதாக தெரிவித்திருந்தார்.
கொள்கைக்காக அந்த ஆசையை நிராகரித்து அவர்களை விரட்டியடித்ததாகவும் அவர் கூறியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமைச்சர் ஷாஜகான் விளக்கம்
இந்த விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய ஐ.யூ.எம்.எல். அமைச்சர் ஷாஜகான், ஃபாருக் பாஷா பேசிய கருத்துகள் திரித்து பேசப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் தேர்தல் முடிவுக்குப் பிறகு மே 8-ந்தேதி இரவு 10 மணிக்கு மேல் ஐ.யூ.எம்.எல். கட்சியைச் சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்களை ஒரு ஓட்டலுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தது யார், அவர்களை மிரட்டியது யார், அவர்களுக்கு காவல் போட்டது யார் என்பது குறித்து வெளிப்படையாக கூற வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.
மேலும், த.வெ.க. ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்ற நோக்கில் எதிர்க்கட்சியினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், மே 7-ந்தேதி ஒரு முடிவும், மே 8-ந்தேதி மற்றொரு முடிவும் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒன்றிய அரசின் கைப்பாவையாக ஆளுநர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், மாநில சுயாட்சி, சமத்துவம் மற்றும் சமூக நீதியை காக்கும் ஆட்சி அமைந்த காரணத்தினாலும் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு வழங்கியதாக ஷாஜகான் தெரிவித்தார்.
ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஐ.யூ.எம்.எல். கட்சியைச் சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்களை அக்கார்டு ஓட்டலில் யார் தங்க வைத்தார்கள் என்பது குறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார். அந்த ஓட்டல் தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அந்த எம்.எல்.ஏ.க்களை அங்கு தங்க வைத்தவர்கள் யார், அவர்களுக்குப் பின்னால் யார் இருந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், பொதுமக்களின் பார்வையில் குதிரைப் பேரம் நடத்தியது தி.மு.க.தான் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரம் சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
