சென்னை: திருக்குடை சேவாசமிதி அறக்கட்டளை சார்பில் நடைபெறும் திருப்பதி திருக்குடை பாதயாத்திரை ஊர்வலத்தையொட்டி சென்னையில் நாளை பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து போலீஸார் அறிவித்துள்ளனர்.
இந்த ஊர்வலம் நாளை புதன்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி காலை 8 மணி முதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடந்து செல்லும் வரை என்.எஸ்.சி. போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அவற்றின் இணைப்புச் சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது.
வாகன ஓட்டிகள் மாற்று வழியாக ஈ.வெ.ரா. சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலை ஆகியவற்றைப் பயன்படுத்தலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், மதியம் 3 மணி முதல் ஊர்வலம் யானைகவுனி பாலத்தை கடந்து செல்லும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்புச் சாலைகளிலும் போக்குவரத்து தடை செய்யப்படும்.
ஊர்வலம் செல்லும் நேரங்களில் சூளை ரவுண்டானா, ராஜா முத்தையா சாலை, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஓட்டேரி சந்திப்பு, கொன்னூர் ஒன் பாயிண்ட் மற்றும் ஓட்டேரி பாலம் உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்படும்.
அதேபோல், ஐ.சி.எப். சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் நியூ ஆவடி சாலை வழியாகவும், மேடவாக்கம் டேங்க் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் எம்.டி. சாலை மற்றும் வி.பி. காலனி சந்திப்பு வழியாக வி.பி. காலனி தெற்கு நோக்கியும் திருப்பிவிடப்படும் என போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்.
