திருச்சி: திருச்சி பஞ்சப்பூரில் ரூ.233 கோடியே 87 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 100 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைந்து இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் சேகரிப்பு அளவு, 2031-ம் ஆண்டுக்குள் 140 எம்.எல்.டி. வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பஞ்சப்பூரில் புதிய நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பஞ்சப்பூரில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலப்பரப்பில் ஏற்கனவே தேசிய நதி நீர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 58.64 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இருப்பினும், மாநகராட்சியின் விரிவடைந்து வரும் தேவையை கருத்தில் கொண்டு, திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 100 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கப்பட்டன. இந்த நிலையத்தில் சீக்வென்சிங் பயோரியாக்டர் எனப்படும் எஸ்.பி.ஆர். நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கழிவுநீரை சுத்திகரித்து மறுசுழற்சி செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் பாதாள சாக்கடை திட்டங்களான யு.ஜி.டி.-1 மற்றும் யு.ஜி.டி.-2 பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீரை சுத்திகரிப்பதற்காக இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியின் மொத்த 65 வார்டுகளில் சுமார் 50 வார்டுகளின் கழிவுநீர் தேவையை இந்த புதிய நிலையம் பூர்த்தி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய தொழில்நுட்பத்தில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையத்திற்கு அதிக நிலப்பரப்பு தேவைப்பட்ட நிலையில், புதிய நவீன தொழில்நுட்பத்தின் மூலம் 10 முதல் 20 ஏக்கர் பரப்பளவிலேயே அதிக கொள்ளளவு கொண்ட நிலையத்தை அமைக்க முடிந்துள்ளது.
இந்த நிலையத்தில் சுத்திகரிக்கப்படும் நீரை அருகில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்தின் தேவைகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கசிவு உள்ளிட்ட தொழில்நுட்ப குறைபாடுகள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அடுத்த மூன்று மாதங்களுக்குள் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, இந்த ஆண்டு இறுதிக்குள் நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய நிலையம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்த பிறகு, பழைய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அகற்றப்பட்டு அந்த இடம் மாநகராட்சியின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
