மதுரை: மதுரை அருகே 11-ம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர் கூடல் நகர் வானவில் நகர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், செல்லூர் அருகே உள்ள கண்மாய் பகுதியில் சடலமாக கிடந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடற்கூறு ஆய்வில் காயங்கள்
தமிழ்ச்செல்வனின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது வலது முழங்கை மற்றும் முட்டியில் காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தமிழ்ச்செல்வனும் அவரது வீட்டின் அருகே வசித்து வந்த 10-ம் வகுப்பு மாணவியும் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்த நட்புக்கு மாணவியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆணவக் கொலை சந்தேகம்
தமிழ்ச்செல்வன் மரணம் தொடர்பாக அவரது குடும்பத்தினர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். இது ஆணவக் கொலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், உண்மையை வெளிக்கொணர விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்காக குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாணவனின் மரணம் தொடர்பாக சமரசமற்ற மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
