இத்தாலி: இத்தாலியின் துரின் நகரில் உள்ள காசெல்லே விமான நிலையத்தில், பயணி ஒருவரின் சூட்கேசில் இருந்து அழியும் ஆபத்தில் உள்ள அபூர்வ வகை முதலையின் தலை பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மியாமியில் இருந்து இஸ்தான்புல் வழியாக துரின் வந்த அந்த இத்தாலிய நபரின் உடைமைகளை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தபோது, முதலையின் தலை கண்டுபிடிக்கப்பட்டது.
சாதாரண பேப்பரில் சுற்றி கடத்தல்
அந்த முதலையின் தலை முழுமையாக உலர்த்தப்பட்டு, சாதாரண பேக்கிங் பேப்பரில் சுற்றப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக, முந்தைய பாதுகாப்புச் சோதனைகளில் அது கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
சர்வதேச அளவில் அழியும் நிலையிலுள்ள விலங்குகள் மற்றும் தாவரங்களின் சட்டவிரோத வர்த்தகத்தைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இத்தாலிய நிதி போலீசாரும் சுங்கத்துறை அதிகாரிகளும் இணைந்து சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
ரூ.2.20 கோடி அபராதம்?
முறையான சான்றிதழ் மற்றும் உரிமம் இல்லாமல் பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு இனத்தைச் சேர்ந்த முதலையின் உடல் உறுப்பை கடத்தியதாக அந்தப் பயணி மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.20 கோடி வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் ஓராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
