வடகொரியா: அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் இணைந்து நடத்திய ஐந்து நாள் கூட்டு ராணுவப் பயிற்சி நிறைவடைந்த சில மணி நேரங்களிலேயே, வடகொரியா கடல் நோக்கி பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியாவின் கிழக்குக் கடற்கரை பகுதியில் உள்ள வொன்சான் பகுதியில் இருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
உளவு கண்காணிப்பு தீவிரம்
ஏவுகணைகள் கடல் பகுதியை நோக்கிச் சென்றதைத் தொடர்ந்து தென் கொரியா தனது உளவு மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஜப்பான் ராணுவத்துடன் இணைந்து ஏவுகணைகள் தொடர்பான தகவல்களை தென் கொரியா பகிர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த ஏவுகணை ஏவுதல் அமெரிக்கா அல்லது அதன் கூட்டாளி நாடுகளுக்கு உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்று அமெரிக்க பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.
‘பிரீடம் எட்ஜ்’ பயிற்சிக்கு எதிர்ப்பு
அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் இணைந்து நடத்திய ‘பிரீடம் எட்ஜ்’ ராணுவப் பயிற்சி, வடகொரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த முத்தரப்பு ராணுவ ஒத்துழைப்பை தனது நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கையாக வடகொரியா கருதி வருகிறது.
பயிற்சிக்கு எதிராக ஏற்கனவே கடும் எச்சரிக்கை விடுத்திருந்த வடகொரிய பாதுகாப்புத் தரப்பு, தற்போது ஏவுகணைகளை ஏவி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
