கீவ்: உக்ரைனுடனான போர் தொடங்கியதில் இருந்து இதுவரை ரஷ்யா 5 லட்சத்துக்கும் அதிகமான வீரர்களை இழந்துள்ளதாக பிரிட்டன் மற்றும் மேற்கத்திய உளவுத்துறை தரவுகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2022 பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா-உக்ரைன் போர் நான்காவது ஆண்டையும் கடந்து நீடித்து வருகிறது.
போர்க்களத்தில் ரஷ்யா மிகப்பெரிய அளவில் மனித மற்றும் ஆயுத இழப்புகளை சந்தித்தாலும் தாக்குதல் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
15 லட்சம் பேர் காயம்?
பிரிட்டன் ராணுவ தரவுகளின்படி, இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 15 லட்சம் பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், 10 ஆயிரத்துக்கும் அதிகமான கவச வாகனங்கள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வான் பாதுகாப்பு மற்றும் பீரங்கி அமைப்புகள், 370-க்கும் அதிகமான போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை ரஷ்யா இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் போர் நீண்டுகொண்டே செல்லும் நிலையில், இரு தரப்பிலும் ஏற்பட்டு வரும் உயிர் மற்றும் பொருளாதார இழப்புகள் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
