சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது. அதேவேளை, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு குறுகிய காலத்திலேயே பதவியை ராஜினாமா செய்து மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடும் நடைமுறை குறித்து தேர்தல் ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மதுராந்தகம், தாராபுரம் உள்ளிட்ட சில தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செப்டம்பர் 16-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில், குறுகிய காலத்தில் பதவியை ராஜினாமா செய்வதால் பொதுமக்களின் வரிப்பணம் மூலம் மீண்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்படுவதாகக் கூறி வழக்கறிஞர் சுதன் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடும்போது சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்றும், இடைத்தேர்தல் செலவுகள் தொடர்பாக உரிய நடைமுறைகளை உருவாக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் நிலையில், குறுகிய காலத்திலேயே ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிடும் நடைமுறை குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்தனர்.
எனினும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலை தடை செய்ய முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதே விவகாரம் தொடர்பான சில வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வு முன்பு நிலுவையில் இருப்பதால், இந்த வழக்கையும் அந்த வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்க மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.
