புதுடெல்லி: சிறார்களுக்கான பாஸ்போர்ட் விதிகளில் மத்திய வெளியுறவு அமைச்சகம் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. புதிய ‘கடவுச்சீட்டு திருத்த விதிகள் – 2026’ செப்டம்பர் 15-ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து நடைமுறைக்கு வந்துள்ளன.
இதன்படி, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் வழக்கமான 36 பக்க பாஸ்போர்ட், இனி வழங்கப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகள் அல்லது குழந்தைக்கு 18 வயது நிறைவடையும் வரை செல்லுபடியாகும். இதில் எது முதலில் வருகிறதோ அதுவரை பாஸ்போர்ட் செல்லுபடியாகும்.
இதற்கு முன்பு சிறார்களுக்கான வயது வரம்பு 15 ஆண்டுகளாக இருந்த நிலையில், தற்போது அது 18 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது.
உதாரணமாக, 14 வயதில் ஒரு குழந்தைக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டால், 5 ஆண்டுகள் முழுமையாக முடிவதற்கு முன்பே அந்த குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்துவிட்டால், அப்போது பாஸ்போர்ட்டின் செல்லுபடியாகும் காலமும் முடிவடையும்.
மேலும், 8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கான கட்டணத்தில் 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பெரியவர்களுக்கான பாஸ்போர்ட் கட்டணங்களிலும் ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 36 பக்க பாஸ்போர்ட் கட்டணம் ரூ.1,500-ல் இருந்து ரூ.2,500 ஆகவும், 60 பக்க பாஸ்போர்ட் கட்டணம் ரூ.2,000-ல் இருந்து ரூ.3,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
தட்கல் முறையில் 36 பக்க பாஸ்போர்ட் கட்டணம் ரூ.3,500-ல் இருந்து ரூ.5,000 ஆகவும், 60 பக்க பாஸ்போர்ட் கட்டணம் ரூ.4,000-ல் இருந்து ரூ.6,000 ஆகவும் உயர்ந்துள்ளது. சிறார்களுக்கான 36 பக்க சாதாரண பாஸ்போர்ட் கட்டணம் ரூ.1,000-ல் இருந்து ரூ.1,750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தட்கல் பாஸ்போர்ட் கட்டணம் ரூ.3,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
