தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து சேகரிக்கப்பட்ட 2,500 டன் அரிசி, பொது விநியோகத் திட்டத்திற்காக சரக்கு ரயில் மூலம் தேனி மற்றும் தூத்துக்குடிக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகங்களிலும் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், அரவை செய்யப்பட்டு அரிசியாக மாற்றப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
இதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து நெல் மற்றும் அரிசி மூட்டைகள் லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் தேவையான பகுதிகளுக்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகின்றன.
அதன்படி, நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2,500 டன் அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் தஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
பின்னர் அவை சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு தேனி மற்றும் தூத்துக்குடிக்கு தலா 1,250 டன் வீதம் அனுப்பி வைக்கப்பட்டன. தலா 21 வேகன்களில் அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசி தேவையான பகுதிகளுக்கு தடையின்றி சென்றடையவும், அரவை செய்யப்பட்ட அரிசியை விரைவாக இடமாற்றம் செய்யவும் ரயில் போக்குவரத்து முக்கிய பங்கு வகித்து வருகிறது.
