துனிஸ்: வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் துனிஸ் மற்றும் சிட்டி எடுஹமன், சயாதின், எல் மவுரொஜி, கிரேட்டர் துனிஸ், சிலியானா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
கனமழை காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் மின்சார சேவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை தொடர்ந்து நீடிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
