ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கான்டோ பகுதியில் பதுங்கியிருந்த 9 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் கான்டோ பகுதியில் தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர். இந்த தகவலை ஜம்மு காஷ்மீர் போலீசார் உறுதி செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் முகமது லத்தீப் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். அதாவது அவர் இந்த பயங்கரவாத குழுவின் தளபதி போல் செயல்படுகிறார்.
அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘இந்த தீவிரவாத அமைப்பின் முக்கிய குற்றவாளி லத்தீப் மற்றும் அவனது கூட்டாளிகள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்தான் வெளிநாட்டு பயங்கரவாதிகளை எல்லை வழியாக இந்தியாவிற்குள் கொண்டு வருகிறார்கள்.
அவர்கள் சம்பா-கதுவா பகுதி வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய உதவுகிறார்கள். தற்போது கைது செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் வெளிநாட்டு பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம், உணவு மற்றும் ஆயுதங்களை வழங்கி வருகின்றன. கைலாச மலையைச் சுற்றியுள்ள மலைகள் மற்றும் காடுகளுக்குள் நுழையவும் தங்கவும் அவர்களுக்கு உதவி செய்கின்றனர்.
இந்த கைலாஷ் மலைத்தொடர் உதம்பூர், கதுவா மற்றும் தோடா ஆகிய 3 மாவட்டங்களுக்குள் நுழையும் முச்சந்தியாகும். அவர்களிடம் நடத்திய விசாரணையில்தான், சமீபத்தில் கான்டோ பகுதியில் நடந்த என்கவுன்டரில் 3 வெளிநாட்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது தெரிய வந்தது.