சென்னை: குடியிருப்பு பகுதியில் திடீரென மாயமாகும் இளம் பெண்ணை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய த்ரில்லர் வெப் தொடரான ‘ஆக்டோபஸ்’, விரைவில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இந்தத் தொடரை ஜெயச்சந்திரா ஹாஷ்மி இயக்கியுள்ளார். மொத்தம் 7 அத்தியாயங்களைக் கொண்ட தொடராக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அஸ்வின், அர்ச்சனா, வினோத் கிஷன், சித்து குமரேசன், கலைவாணி பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இளம் பெண் மாயம்
ஒரு குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் இளம் பெண் ஒருவர் திடீரென காணாமல் போகிறார். அவரைத் தேடும் முயற்சியில் அந்தப் பகுதியில் வசிக்கும் அக்கம்பக்கத்தினர் ஒன்றிணைகின்றனர்.
ஆனால், காணாமல் போன பெண்ணை தேடும் பயணம் சாதாரண தேடலாக மட்டும் இல்லாமல், அந்த குடியிருப்பில் வசிக்கும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மறைந்திருக்கும் பல்வேறு ரகசியங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது.
யார் உண்மையை மறைக்கிறார்கள்? காணாமல் போன பெண்ணுக்கு என்ன நடந்தது? அந்த சம்பவத்துக்கும் குடியிருப்பில் உள்ளவர்களுக்கும் என்ன தொடர்பு? போன்ற கேள்விகளுக்கு ஒவ்வொரு அத்தியாயத்திலும் புதிய தகவல்கள் கிடைக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உறவுகளும் மர்மமும்
குற்றம் மற்றும் மர்மத்தை மட்டும் மையமாகக் கொள்ளாமல், ஒரே குடியிருப்பில் வசிக்கும் மனிதர்களுக்கிடையேயான உறவுகள், நம்பிக்கை, சந்தேகம், தனிப்பட்ட ரகசியங்கள் உள்ளிட்ட அம்சங்களையும் தொடர் பேசுகிறது.
வெளியாகியுள்ள முன்னோட்டக் காட்சிகளில் குடியிருப்புவாசிகளின் பரபரப்பான உரையாடல்கள், திடீர் திருப்பங்கள், விசாரணை காட்சிகள் மற்றும் நீதிமன்றக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பின்னணி இசையும் காட்சிகளின் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
‘When Neighbourhood Becomes Family’ என்ற கருப்பொருளுடன் இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. ஓர் இடத்தில் அருகருகே வசிப்பவர்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவு தெரிந்தவர்கள்? நமக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர்களிடம் கூட மறைக்கப்பட்ட வாழ்க்கை இருக்க முடியுமா? என்ற கேள்விகளையும் கதை எழுப்பும் வகையில் தொடர் அமைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் நிலையில், ஓடிடி ரசிகர்கள் மத்தியில் ‘ஆக்டோபஸ்’ மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
