மதுரை: திடீரென காய்ச்சல், குளிர்நடுக்கம், உடல்வலி, தலைவலி, கடுமையான சோர்வு ஆகியவை ஒரே நேரத்தில் தாக்கினால் அது சாதாரண சளிக் காய்ச்சலாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. குறிப்பாக பருவகால மாற்றங்களின் போது இன்ஃப்ளூயன்ஸா எனப்படும் ஃப்ளூ பாதிப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்ஃப்ளூயன்ஸா வைரஸால் ஏற்படும் இந்த சுவாசத் தொற்று ஆண்டு முழுவதும் ஏற்படலாம். உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, பெரும்பாலானோர் ஒரு வாரத்துக்குள் குணமடைகின்றனர். ஆனால் சிறு குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் நீண்டகால உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் அதிகம்.
முக்கிய அறிகுறிகள்
திடீரென காய்ச்சல், குளிர்நடுக்கம், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, கடுமையான சோர்வு, தொண்டைவலி, இருமல், மூக்கொழுகுதல் அல்லது மூக்கடைப்பு போன்றவை ஏற்படலாம்.
குழந்தைகளுக்கு சில நேரங்களில் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளும் காணப்படலாம். ஆனால் ஃப்ளூ பாதித்த அனைவருக்கும் காய்ச்சல் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.
மழையில் நனைந்ததாலேயே ஃப்ளூ ஏற்படுவதில்லை. இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்றுதான் முக்கிய காரணம்.
யார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்?
சிறு குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், ஆஸ்துமா போன்ற நீண்டகால நோய்கள் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் ஆகியோர் அறிகுறிகள் தோன்றும்போது மருத்துவரை அணுகுவது அவசியம்.
மூச்சுத்திணறல், நீடித்த நெஞ்சுவலி, குழப்பம், அதிக தூக்கம் அல்லது எழுப்ப முடியாத நிலை, உதடுகள் நீல நிறமாக மாறுதல், திரவங்களை அருந்த முடியாத நிலை போன்றவை அவசர மருத்துவ உதவி தேவைப்படும் எச்சரிக்கை அறிகுறிகளாகும்.
குழந்தைகளிடம் வேகமான சுவாசம், மூச்சுவிடும்போது நெஞ்சுப்பகுதி உள்ளிழுத்தல், பால் குடிக்க முடியாமை போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
ஆண்டிபயாட்டிக் தானாக வேண்டாம்
ஃப்ளூ வைரஸால் ஏற்படுவதால், ஆன்டிபயாட்டிக் மருந்துகள் நேரடியாக அதற்கு சிகிச்சை அளிக்காது. பாக்டீரியா தொற்று சேர்ந்திருப்பதாக மருத்துவர் கருதினால் மட்டுமே அவை தேவைப்படலாம்.
பழைய மருந்துச் சீட்டைப் பார்த்து தானாக ஆன்டிபயாட்டிக் அல்லது ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொள்ளக் கூடாது.
காய்ச்சல் மற்றும் உடல்வலிக்கு மருத்துவர் அல்லது மருந்தாளரின் ஆலோசனைப்படி பாராசிட்டமால் பயன்படுத்தலாம். ஒரே மருந்து பல்வேறு கூட்டு சளி மருந்துகளிலும் இருக்கக்கூடும் என்பதால் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளாமல் கவனிக்க வேண்டும்.
48 மணி நேரம் முக்கியம்
அதிக ஆபத்து உள்ளவர்களுக்கு ஃப்ளூ அறிகுறிகள் தொடங்கிய முதல் 48 மணி நேரத்துக்குள் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் தொடங்கப்பட்டால் கடுமையான சிக்கல்களை குறைக்க உதவலாம் என உலக சுகாதார அமைப்பு குறிப்பிடுகிறது.
போதிய ஓய்வு, தூக்கம், திரவ உணவுகள் மற்றும் உடலுக்கு ஏற்ற உணவு எடுத்துக்கொள்வதும் அவசியம். ஆண்டுதோறும் ஃப்ளூ தடுப்பூசி தேவையா என்பதை மருத்துவரிடம் ஆலோசித்து தெரிந்து கொள்வதும் தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
