வயநாடு: யானைத் தந்தங்களை விற்பனை செய்ய வந்ததாக கூறப்படும் கும்பலைச் சேர்ந்த 5 பேரை கேரள வனத்துறையினர் கைது செய்து, ஒரு ஜோடி யானைத் தந்தங்கள் மற்றும் தந்தத் துண்டை பறிமுதல் செய்துள்ளனர்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று வயநாட்டில் உள்ள விடுதிக்கு வந்து யானைத் தந்தங்களை விற்பனை செய்ய இருப்பதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்தை கண்காணித்தனர். அங்கு சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, யானைத் தந்தங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து காரில் இருந்த ஷமின் பிரான்சிஸ், அபிலாஷ் ஆகிய இருவரை கைது செய்த வனத்துறையினர், தந்தங்களையும் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ராஜேஷ், பாலன், ஜித்து ஆகிய மேலும் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
பெரிய கடத்தல் கும்பலா?
கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் வயநாடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் வனவிலங்கு கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்கள் எங்கிருந்து பெறப்பட்டன, அவற்றை யார் வழங்கினர், விற்பனைக்கு பின்னால் மேலும் யாரெல்லாம் உள்ளனர் என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது. இந்த நடவடிக்கையில் வனப் புலனாய்வு, வன கண்காணிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட வனச்சரக அதிகாரிகள் இணைந்து செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
