கெய்ரோ: எகிப்து நாட்டில் இரண்டு பயணிகள் ரெயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு தெற்கே உள்ள கிசா மாகாணத்தின் அல்-அய்யாத் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கிசாவிலிருந்து ஃபய்யூம் நகரை நோக்கிச் சென்ற பயணிகள் ரெயில், ஏற்கனவே அதே தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த கெய்ரோ – அஸ்வான் வழித்தட ரெயிலின் பின்புறத்தில் வேகமாக மோதியது. இந்த மோதலின் தாக்கத்தால் ரெயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன.
விபத்து ஏற்பட்டதும் ரெயிலில் இருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு வெளியேற முயன்றனர். சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மீட்புப் பணிகளுக்காக 72 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டதாக எகிப்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலருக்கு எலும்பு முறிவு, தலை மற்றும் முகத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த விபத்து தொடர்பாக எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். விபத்துக்குக் காரணமான தொழில்நுட்பக் கோளாறு, சிக்னல் பிரச்சினை அல்லது மனிதத் தவறு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் ரெயில் விபத்துகள் தொடர்ந்து நடைபெறுவது அந்நாட்டின் ரெயில்வே பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. பழைய ரெயில்வே கட்டமைப்புகளை நவீனப்படுத்த அரசு பல பில்லியன் எகிப்திய பவுண்டுகளை முதலீடு செய்து வரும் நிலையில், இந்த விபத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது.
