உத்தரபிரதேசத்தில் 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. தனது அரசியல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. மதுராவில் நடைபெற்ற கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா பேசிய கருத்துகள் தேசிய அரசியலில் கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக அயோத்திக்குப் பிறகு மதுராவை முன்னிறுத்திய அவரது பேச்சு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பேசிய மவுரியா, 2027 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2017-ம் ஆண்டுக்குப் பிறகு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மேம்பட்டுள்ளதாகவும், வளர்ச்சியடைந்த உத்தரபிரதேசத்தை உருவாக்கும் திறன் பா.ஜ.க.வுக்கே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் உத்தரபிரதேசத்தில் 60 சதவீத வாக்குகள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவையும் விமர்சித்த அவர், மதுராவுக்கு வந்து கரசேவையில் பங்கேற்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்தப் பேச்சு பா.ஜ.க.வின் தேர்தல் அரசியல் வியூகத்தை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தைத் தொடர்ந்து மதுரா கோவில் விவகாரத்தையும் அரசியல் மேடைகளில் முன்னிறுத்துவது உத்தரபிரதேசத் தேர்தலில் முக்கிய விவாதமாக மாறக்கூடும். இந்த நிலையில் பா.ஜ.க.வின் தேர்தல் பிரசாரம் எந்தத் திசையில் செல்லும், எதிர்க்கட்சிகள் இதற்கு எவ்வாறு பதிலளிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
