உக்ரைன் நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜபோரிஜியா நகரில் ரஷ்ய ராணுவம் நடத்திய இரவு நேரத் தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். நான்கு குழந்தைகள் உட்பட 40 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் பிராந்திய ஆளுநர் மைக்கைலோ செமிகின் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் குடியிருப்புப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஐந்து மாடிக் குடியிருப்புக் கட்டிடம் ஒன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. தனியார் வீடுகள், வாகனங்கள் மற்றும் போக்குவரத்து கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன. கட்டிட இடிபாடுகளுக்குள் பொதுமக்கள் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்ததால் மீட்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
தாக்குதல் நடைபெற்ற பகுதிகளில் கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்து சிதறிக் கிடந்தன. சாலைகளில் கட்டிட இடிபாடுகள் குவிந்திருந்தன. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் பாதிக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே உக்ரைனின் பிற பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மறுபுறம் உக்ரைனும் ரஷ்யாவின் ராணுவ இலக்குகள் மீது தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளும் பொதுமக்களை திட்டமிட்டு குறிவைப்பதில்லை என்று கூறிவரும் நிலையில், போர் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
