சென்னை: பக்கோடா மோர்குழம்பு வைப்பது பற்றி தெரியுங்களா? நல்ல சுவை, மாற்றமான உணவு என்பதால் வீட்டில் உள்ள அனைவரும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். அதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
நாம் வெங்காயத்தை மோர்க் குழம்பில் அதிகம் சேர்ப்பது இல்லை. ஆனால் அதை சேர்த்து செய்யும்போது தனி ருசியாக இருக்கும். இந்த வகையில் பகோடா மோர் குழம்பு செய்யலாம்.
தேவையான பொருட்கள்: பகோடா தயாரிக்க கடலைமாவு-6 டேபிள் ஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் —1, மிளகாய்ப் பொடி, உப்பு-கால் டீஸ்பூன், எண்ணெய் தேவையான அளவு, கெட்டியான மோர்—3 கப்புக்கு அதிகமாக. கடலைப் பருப்பு—-1 டேபிள் ஸ்பூன், தனியா—-2 டீஸ்பூன், கடுகு—-1 டீஸ்பூன், பச்சைமிளகாய்—–3, வற்றல் மிளகாய்—1, தேங்காய்த் துருவல்—1 டேபிள் ஸ்பூன், கடுகு,பெருங்காயம், மஞ்சள் பொடி, உப்பு.
செய்முறை: கடலைப்பருப்பு, தனியா. கடுகை ஊற வைத்த பச்சைமிளகாய், தேங்காய்த் துருவல், வற்றல் மிளகாய் சேர்த்து மிக்ஸியில் திட்டமாக நீர் சேர்த்து மிருதுவாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை மோருடன் உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கரைத்து வைக்கவும். கடலைமாவு, நறுக்கிய வெங்காயம், உப்பு, மிளகாய்ப்பொடி சேர்த்துக் கலந்து நீர் விட்டு தளரப் பிசைந்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காய வைத்து கலந்த மாவை பகோடாக்களாக உருட்டிப் போட்டு பொன்நிறமாகப் பொறித்தெடுக்கவும். மோர்க் கலவையை குழம்பு வைக்கும் பாத்திரத்தில் கொட்டி மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பொறித்தெடுக்கும் போதே பகோடாக்களைக் குழம்பில் சேர்த்து விடவும்.
பால் போல் நுரைத்து வரும்போது கிளறி தீயை மட்டுப்படுத்தி 2 நிமிடம் வைத்திருந்து, கடுகு, பெருங்காயம் தாளித்து மூடி வைக்கவும். பக்கோடா மிருதுவாக ஆகி, குழம்பு தயார். இறக்கி சூடாக பறிமாறவும். ஆஹா என்ன ருசி… என்ன ருசி என்று குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் சாப்பிடுவதை காணலாம்.