சென்னை: புலன் விசாரணை முடிந்தது… கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவம் தொடர்பான வழக்கில், புலன் விசாரணை முடிந்துள்ள நிலையில், சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டியது இல்லை’ என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து, 66க்கும் மேற்பட்டோர் பலியாகினர். சம்பவம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்றக்கோரி, அ.தி.மு.க., நிர்வாகி இன்பதுரை, பா.ம.க., நிர்வாகி கே.பாலு, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பார்த்தசாரதி, ஸ்ரீதர், பா.ஜ., வழக்கறிஞர் மோகன்தாஸ் உள்ளிட்டோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
மனுக்கள், பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி பி.பி.பாலாஜி அடங்கிய முதல் அமர்வில், மீண்டும் விசாரணைக்கு வந்தன. அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாதாடியதாவது:
சம்பவம் குறித்த புலன் விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம். தடய அறிவியல் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். இந்நிலையில், சி.பி.ஐ.,க்கு மாற்றுவதால் எந்த பலனும் இல்லை. உள்ளூர் அரசியல்வாதிகள், போலீசார் தொடர்புக்கு எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், தொண்டு நிறுவனங்கள் யாரும் வழக்கு தொடரவில்லை. எதிர்க்கட்சிகள் தான் இந்த மனுக்களை தாக்கல் செய்து உள்ளன. இவ்வாறு அவர் வாதாடினார். அட்வகேட் ஜெனரல் வாதம் முடியாததால், விசாரணை செப்டம்பர் 4க்கு தள்ளி வைக்கப்பட்டது.