புதுடில்லி: இந்தியா பங்கேற்கிறதா?… பாகிஸ்தானில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் இந்தியா பங்கேற்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில், இந்த கூட்டத்தில் பங்கேற்க வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை அனுப்பி வைப்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை.
இந்தியா, ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு அக்.,15 மற்றும் 16 தேதிகளில் நடைபெற உள்ளது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் மோடிக்கு அந்நாடு அழைப்பு விடுத்து உள்ளது.
இந்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க போவதில்லை. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. தற்போது அமெரிக்காவில் இருக்கும் அவர், அடுத்த வாரம் டில்லி திரும்புகிறார். அப்போது தான் அவர் பாகிஸ்தான் செல்வது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளதாக டில்லி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இதற்கு முன்னர், 2015ம் ஆண்டு அப்போது வெளியுறவு அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தான் சென்று இருந்தார். அப்போது வெளியுறவு செயலாளர் ஆக ஜெய்சங்கர் உடன் சென்றார். அதன்பிறகு இரு நாடுகளுக்கும் இடையே உறவு இல்லை; உயர் பதவி வகிப்பவர்கள் யாரும் இந்தியாவில் இருந்து அந்நாட்டுக்கு செல்லவில்லை.
தற்போது ஜெய்சங்கர் சென்றாலும் இரு நாடுகளுக்கு இடையில் நேரடி பேச்சு நடத்த வாய்ப்பு மிகக்குறைவு. கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த எஸ்.சி.ஓ., மாநாட்டில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சராக இருந்த பிலாவல் புட்டோ நேரில் வந்து பங்கேற்றார்.