சென்னை: தமிழக கடலோர கிராமப் பகுதிகளில் இன்றும் நாளையும் கடல் விழிப்பு ஒத்திகை நடைபெறுகிறது. கடலோர காவல்படையினர் கடல் ரோந்து பணியிலும், கடற்படையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் மீது சோதனையிலும் ஈடுபட்டனர். கடல் வழியாக பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்க ஆண்டுதோறும் பல்வேறு பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், கடலோர காவல்படை மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் இணைந்து இன்றும் நாளையும் ஆபரேஷன் சீ விஜில் என்ற கடல் பாதுகாப்பு பயிற்சியை மேற்கொண்டுள்ளனர். ஒத்திகையின் முதல் நாளான இன்று செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் மற்றும் கல்பாக்கம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. படகு மூலம் கடலில் ரோந்து செல்வதுடன், கடல் வழியாக யாரேனும் ஊடுருவ முயற்சிப்பதை கண்காணித்து வருகின்றனர்.