ஆற்காடு: ரத்னகிரி கோவிலில் நடந்த கந்த சஷ்டி விழாவின் 4-ம் நாளான நேற்று பாலமுருகன் சுவாமிக்கு நவரத்தின அங்கி அலங்காரம் செய்யப்பட்டது. இதில் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், ரத்தினகிரியை அடுத்த அரத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில், 7-ம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இக்கோயிலில் கந்த ஷஷ்டி விழா கடந்த 2-ம் தேதி துவங்கியது. 4-வது நாளான நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை நடந்தது.
பாலமுருகனடிமை சுவாமி கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்தார். கந்த சஷ்டியின் 4-ம் நாளான நேற்று பாலமுருகன் சுவாமி நவரத்தின வஸ்திரம் அணிவித்து வெள்ளி வேள்வி, சேவல் கொடியுடன் வள்ளி தெய்வானை சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி மயில் மீது அமர்ந்து உற்சவர் வாத்தியங்கள் முழங்க வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா முழங்க சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலையில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. வரும் 8-ம் தேதி வரை நடக்கும் கந்த ஷஷ்டி விழாவில் தினமும் பாலமுருகன் சுவாமி வெவ்வேறு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 7-ம் தேதி மாலை சூரசம்ஹாரம் நடக்கிறது.
அதேபோல், வாலாஜா அணைக்கட்டு சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில் கந்த ஷஷ்டி 4-ம் நாள் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் உற்சவர் சண்முகர் நாகவாகனத்தில் அமர்ந்து சிவனை வழிபடும் வகையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.