திருச்செந்தூர்: ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
விடுமுறை நாளை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.
அதிகாலையில் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடிய பக்தர்கள், நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வாகனங்களின் வருகையால் திருச்செந்தூர் நகரில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் மற்றும் உதய மார்த்தாண்ட அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.